நலன் காப்பதே நன்மைகளின் அடிப்படை

‘நலன்கள் பற்றிய பிரபலமான கூற்று ஒன்று பின்வருமாறு முன்வைக்கப்படுகிறது. “இஸ்லாமிய வரம்புகள்” என்பது முற்று முழுதாக நலன்களே. அவை ஒன்றில் நன்மைகளை மேம்படுத்துவதாக இருக்கின்றன. அல்லது தீமைகளை அகற்றுபவையாக இருக்கின்றன.’ இஸ்லாமிய சட்டத்துறை வரலாற்றில் இன்றுவரை பிரகாசிக்கின்ற ஒரு கருத்தாக இந்தக் கூற்று பரிணமிக்கின்றது.

இந்த வகையில் அனைத்து வகையான நலன்களை மேம்படுத்துவதும் அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அவற்றின் பயன்பாட்டு எல்லைகளை விரிவுபடுத்துவதும் இஸ்லாம் எம்மீது சுமத்தியுள்ள தலையாய கடமைகளாக இருக்கின்றன.

ஆன்மீக நலன்கள், லௌகீக நலன்கள், தனி மனித, குடும்ப, சமூக, தேச நலன்கள், இயற்கையால் விளையும் நலன்கள், கல்வி, பொருளாதார, சுகாதார நலன்கள், நிதி, நீதி, நிர்வாகம், சட்டம், ஒழுங்கு என்பவற்றால் பேணப்படும் நலன்கள் என மேம்படுத்தப்பட வேண்டிய, பாதுகாக்கப்பட வேண்டிய நலன்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.

இத்தகைய நலன்களை மேம்படுத்துவதும் அவற்றால் இன, குல, பேதங்களைக் கடந்து அனைத்து மக்களும் நன்மையடைவதும் இஸ்லாத்தின் பிரதான இலக்குகளில் ஒன்றாகும். எனினும் நலன்களுக்கு எதிரானதாக இஸ்லாம் இன்று சித்தரிக்கப்படுகிறது. அந்த சித்தரிப்புக்கு உடந்தையாக உலக முஸ்லிம்களில் சிலர் தமது நோக்குகளையும் நடத்தைகளையும் கொண்டிருக்கின்றமை வருந்தத்தக்கதாகும்

வருந்தத்தக்க இந்நிலை விதிவிலக்கானது என்பதனைப் புரிய வைக்கின்ற அதேவேளை நலன்கள் அனைத்தையும் பெற்று வாழ்வதற்காக உழைக்க வேண்டும் என்பதே எமது அன்பான அழைப்பாக இருக்கிறது. நலன்களை மேம்படுத்துவதற்காக நாமும் உழைப்பதோடு அவற்றுள் ஒன்றையோ, பலதையோ மேம்படுத்த உழைப்போருடன் இணைந்து உழைக்கவும் நாம் தயாராக இருக்கிறோம்.

நலன்கள் உயர்ந்தாலே நாசங்கள் குறையும்.

 

Ash Sheikh M.H.M. உஸைர் இஸ்லாஹி
தலைவர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.